நேரு பூங்காவை அழகுபடுத்தும் பணி மும்முரம்

கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற உள்ளது. இதையொட்டி பூங்காவை அழகுபடுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-05-01 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற உள்ளது. இதையொட்டி பூங்காவை அழகுபடுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

காய்கறி கண்காட்சி

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி முதல் நிகழ்ச்சியாக வருகிற 6, 7-ந் தேதிகளில் 12-வது காய்கறி கண்காட்சி கோத்தகிரி நேரு பூங்காவில் நடக்கிறது. இந்த கண்காட்சியில் காய்கறிகளான பிரமாண்ட சிற்பங்கள், பறவைகள், வனவிலங்குகளின் உருவங்கள் தத்ரூபமாக அமைக்கப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதையொட்டி பூங்காவை அழகுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பூங்காவில் கடந்த பிப்ரவரி மாதம் 30 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. தற்போது அந்த செடிகளில் பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. இது சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் உள்ளது. பழுதடைந்த நடைபாதைகளை பராமரித்து புதுப்பித்து, வர்ணம் பூசப்பட்டது.

செல்பி ஸ்பாட்

நேரு பூங்காவை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து செயற்கை நீரூற்று, சுற்றுச் சுவர், கழிப்பிடம் புதுப்பிப்பு உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் நடந்தது.

மேலும் சிறுவர் விளையாட்டு பூங்காவில் குழந்தைகளை கவரும் வகையில் புதியதாக 9 விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டு, தரைத்தளம் புல்தரையாக மாற்றப்பட்டது.

இந்தநிலையில் தற்போது பூங்காவின் மையப்பகுதியில் எல்.இ.டி. விளக்குகளுடன் 'ஐ லவ் கோத்தகிரி' என்ற வாசகத்துடன் பறவையின் சிறகு வடிவில் செல்பி ஸ்பாட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் ரோஜா பூங்காவின் நடுவே நம்ம கோத்தகிரி என்ற வாகசங்கள் அடங்கிய போர்டு வைக்கப்பட்டு உள்ளது.

சுற்றுலா பயணிகள்

காய்கறி கண்காட்சியை காண வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்க்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தர உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்