தேயிலை தோட்டத்தில் 2 குட்டிகளுடன் உலா வந்த கரடி
கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் 2 குட்டிகளுடன் கரடி உலா வந்தது.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் 2 குட்டிகளுடன் கரடி உலா வந்தது. இதனால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
2 குட்டியுடன் உலா வந்த கரடி
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் கோத்தகிரி அருகே பன்னீர் கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் 2 குட்டிகளுடன் கரடி புகுந்தது. தொடர்ந்து அந்த கரடிகள் அந்த பகுதியில் விளையாடியவாறு உலா வந்தன.
தொழிலாளர்கள் பீதி
இதனைக்கண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். பின்னர் அந்த கரடி தேயிலை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. இந்த காட்சிகளை சிலர் தூரத்தில் இருந்து தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இந்த காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தேயிலை தோட்டத்தில் 2 குட்டியுடன் உலா வந்த கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.