மயில்கள், காட்டுப்பன்றிகளால் பயிர் சேதம்

மயில்கள், காட்டுப்பன்றிகளால் பயிர் சேதம்

Update: 2023-02-12 15:23 GMT

போடிப்பட்டி

மடத்துக்குளம் வட்டாரப் பகுதிகளில் மயில்கள் மற்றும் காட்டுப்பன்றிகளால் ஏற்பட்ட பயிர் சேதத்தை வனத்துறையினர் ஆய்வு செய்துள்ளனர்.

பயிர் சேதம்

பருவநிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை, இடுபொருட்கள் விலை உயர்வு, விளை பொருட்களுக்கு போதிய விலையின்மை, கூலி ஆட்கள் தட்டுப்பாடு என விவசாயிகள் பலவிதமான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில் மடத்துக்குளம் பகுதியில் மயில்கள், காட்டுப்பன்றிகள் போன்றவற்றால் பெருமளவு பயிர் சேதம் ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வனத்தை ஒட்டிய பகுதிகளில் வன விலங்குகளால் பயிர் சேதம் ஏற்பட்டு வந்த நிலை மாறி பல கிலோ மீட்டர்கள் தொலைவிலும் ஊடுருவி சேதப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காட்டுப் பன்றிகள் ஆற்றங்கரையோரம் மற்றும் தரிசு நிலங்களில் உள்ள புதர்களில் தங்கி இனப்பெருக்கம் செய்து பல மடங்காக பெருகியுள்ளது. அவை கூட்டம் கூட்டமாக விளைநிலங்களுக்குள் புகுந்து மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்ட அனைத்து விதமான பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. அத்துடன் தென்னங்கன்றுகளை தோண்டி வீணாக்கி விடுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் காட்டுப் பன்றிகளால் அச்சுறுத்தல் உள்ளது.

வனத்துறை ஆய்வு

பல மடங்காக பெருகியுள்ள மயில்கள் பெருமளவு பயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக நிலக்கடலை உள்ளிட்டவை விதைக்கும் போதே மயில்கள் விதைகளைத் தோண்டி தின்று விடுகிறது. இதனால் கடும் மகசூல் இழப்பை சந்திக்கும் நிலை உள்ளது. தற்போது மடத்துக்குளம் பகுதியில் அறுவடைக்குத் தயாராக உள்ள நெல் வயல்களில் மயில்கள் கூட்டமாக புகுந்து சேதம் விளைவிக்கின்றன. தேசியப்பறவை என்பதால் மயில்களையும், வனவிலங்கு என்பதால் காட்டுப் பன்றிகளையும் விவசாயிகள் விரட்டுவதற்குக் கூட தயங்க வேண்டிய நிலை உள்ளது.

இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. தற்காலிக தீர்வாக சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தோம். அதனடிப்படையில் மடத்துக்குளத்தையடுத்த கண்ணாடிப்புத்தூர் தெற்கு பகுதியில் காட்டுப் பன்றிகள் மற்றும் மயில்களால் ஏற்பட்ட சேதத்தை அமராவதி வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.பயிர் சேதங்களை வனத்துறையினர் ஆய்வு செய்துள்ள நிலையில் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்