இடர்பாடுகளை தவிர்க்க விழிப்புடன் இருக்க வேண்டும்-கோட்டாட்சியர் அறிவுறுத்தல்
ஆரணி
மழை காலத்தில் இயற்கை இடர்பாடுகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளுடன் தயாராக இருக்க வேண்டும் என பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில் கோட்டாட்சியர் அறிவுரை வழங்கினார்.
ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சில நாட்களில் தொடங்க உள்ளது. இதனையொட்டி ஆரணி வருவாய் கோட்ட அளவில் செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்நடந்தது.
கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி தலைமை தாங்கி எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையில் பொதுமக்களை காப்பது குறித்தும் உடனுக்குடன் இடர்பாடுகளை நீக்கி மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார். கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி பேசுகையில், ''தாழ்வான பகுதி எவை, ஏரிக்கரை பலப்படுத்தப்பட்டுள்ளதா, அதேபோல மதகுகள் சரியாக உள்ளதா, மழை பாதிப்பு தெரியக்கூடிய பகுதிகள் எவை என அனைத்து அலுவலர்களுமே தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சி தலைவரின் செல்போன் எண்களும், அந்தந்த பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண் துறை, தோட்டக்கலை, கல்வியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
பொக்லைன் எந்திரம் வைத்திருப்பவருடைய செல்போன் எண்களையும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள். இடர்பாடு ஏற்பட்டால் மக்களை காப்பாற்ற துரிதமாக செயல்பட விழிப்புடன் இருக்க வேண்டும்''் என அறிவுறுத்தி பேசினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
கூட்டத்தில் தாசில்தார்கள் மஞ்சுளா (ஆரணி), வெங்கடேசன் (போளூர்), மனோகரன் (ஜமுனாமரத்தூர்), ராஜராஜேஸ்வரி (கலசபாக்கம்), ஆரணி நகராட்சி ஆணையாளர் கே.பி. குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி, பிரபாகரன், விஜயலட்சுமி, மின் உதவி பொறியாளர் ஜெயலட்சுமி, தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்துறை, தோட்டக்கலை, களம்பூர், கண்ணமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.