குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக குளிக்க தடை
குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலமாகும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வீசும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்த சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவார்கள். இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் தான் சீசன் தொடங்கியது. தற்போது சீசன் முடிந்த பிறகும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
நேற்று முன்தினம் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதைத்தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று மதியத்திற்கு பிறகும் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் மீண்டும் இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இதேபோன்று பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர்.