ரூ.30 லட்சத்தில் குளியல் தொட்டி திறப்பு:சவரில் உற்சாகமாக குளித்ததிருச்செந்தூர் கோவில் யானை

ரூ.30 லட்சம் மதிப்பில் திருச்செந்தூர் கோவில் தெய்வானை யானைக்கு குளியல் தொட்டி திறக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள சவரில் யானை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தது.

Update: 2023-04-26 18:45 GMT

திருச்செந்தூர்:

ரூ.30 லட்சம் மதிப்பில் திருச்செந்தூர் கோவில் தெய்வானை யானைக்கு குளியல் தொட்டி திறக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள சவரில் யானை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தது.

திருச்செந்தூர் கோவில் யானை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை யானை உள்ளது. திருவிழா காலங்களில் சுவாமி வீதி உலா செல்லும் போது, சுவாமிக்கு முன் இந்த யானை செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல் தினசரி தங்கத் தேர் கிரிபிரகாரத்தில் பவனி வரும் போதும் தேருக்கு முன் செல்லும்.

யானை தெய்வானை குளிப்பதற்காக சரவண பொய்கையில் ரூ.30 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி புதிதாக கட்டப்பட்டுள்ளது. 5½ அடி ஆழம் கொண்ட இந்த தொட்டியில் சவரும் அமைக்கப்பட்டு உள்ளது.

குளியல் தொட்டி திறப்பு

இந்த குளியல் தொட்டியின் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து யானை தெய்வானை குளியல் தொட்டிக்குள் இறங்கி உற்சாகமாக குளித்தது. தொட்டியில் வைக்கப்பட்ட சவரிலும் நின்று உற்சாகமாக குளியல் போட்டது. இதை அங்கிருந்தவர்கள் ஆர்வமாக கண்டுகளித்தனர்.

பேட்டி

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், வாமசுந்தரி அசோசியேஷன் நிறுவனம் சார்பில் ரூ.206 கோடியே 45 லட்சம் மதிப்பில் 18 பணிகளும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.90 கோடியே 90 லட்சம் மதிப்பில் 18 பணிகளும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. மொத்தம் 6 லட்சம் சதுர அடியில் பணிகள் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக சுமார் 1 லட்சம் சதுர அடியில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 14 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபாதை

மேலும், கோவில் யானை தெய்வானை மகிழ்ச்சியாக இருக்க ரூ.30 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த சரவண பொய்கையில் நந்தவனம் அமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மாற்றுத்திறனாளிகள் கடலில் நீராட ரூ.50 லட்சம் செலவில் நடைபாதை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த மாவட்டத்தில் 12 ஆண்டுகள் திருப்பணிகள் மேற்கொள்ளப்படாத கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல் 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட 714 கோவில்கள் பராமரிப்பதற்கு கடந்த ஆண்டு ரூ.100 கோடி அரசு மானியமாக வழங்கியது. அதுபோல் இந்த ஆண்டும் ரூ.100 கோடி வழங்கப்பட்டு 60-க்கும் மேற்பட்ட திருக்கோவில்கள் பராமரிப்பு பணிகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

கோவில் கும்பாபிேஷகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 3 கட்டமாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நிலத்தடி நீர்த்தேக்க தொட்டி, நிர்வாக அலுவலகம், கழிவுநீர் கால்வாய்கள் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் 3 ஆண்டுகளுக்குள் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும்.

யாத்திரிகர் நிவாஸ் கட்டுவதற்கு ரூ.19 கோடி மதிப்பில் விரைவில் ஒப்பந்தம் கோரப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, கோவில் இணை ஆணையர் கார்த்திக் உள்பட பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்