அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்
தென்காசியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என நகரசபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினார்கள்
தென்காசி நகரசபை கூட்டம் அதன் தலைவர் சாதிர் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத்தலைவர் சுப்பையா, நகராட்சி ஆணையாளர் பாரிசான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரும்பாலான கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலர் குடிநீர், வாறுகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு தலைவர் சாதிர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், தொடர்ந்து அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும், என்றும் கூறினார்.
பா.ஜ.க. கவுன்சிலர்கள் சங்கர சுப்பிரமணியன், லெட்சுமண பெருமாள் ஆகியோர் பேசும்போது, நகராட்சி மூலம் தென்காசி பஜார்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டும் ஏன் அகற்றவில்லை? என்று கேட்டனர்.
இதற்கு ஆணையாளர் பாரிசான், வியாபாரிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தீபாவளிக்கு பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும், என்றார்.