சாலைகளில் வேகத்தடைகளுக்கு பதில் தடுப்பு வேலிகள் அமைக்கலாம் சமூக ஆர்வலர்கள் கருத்து
தடுப்பு வேலிகள்
சாலைகளில் வேகத்தடைகள் அமைப்பதற்கு பதிலாக தடுப்பு வேலிகள் அமைக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
வேகத்தடைகள்
ஈரோடு மாவட்டத்தில் தேசிய, மாநில மற்றும் ஒன்றிய சாலைகள் உள்ளன. இதில் மாநில சாலைகள் மற்றும் ஒன்றிய சாலைகளில் வேகத்தடைகள் பெருமளவில் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ரோடுகள் வழியாக மிக முக்கிய நபர்கள், தலைவர்கள் வருவதாக இருந்தால் உடனடியாக அந்த வேகத்தடைகளை அகற்றும் பணிகள் நடப்பதும், பின்னர் மீண்டும் அதை போடுவதும் தொடர்கதையாக உள்ளது.
இதனால் சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே வேகத்தடைகள் அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
ஈரோட்டில் உள்ள மாநில சாலைகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஒன்றிய அளவிலான சாலைகளில் வேகத்தடைகள் அமைப்பது அதிகமாக உள்ளது. சில பகுதிகளில் குடியிருப்பு வாசிகளே எந்த அனுமதியும் இல்லாமல் வேகத்தடைகள் அமைக்கிறார்கள்.
தடுப்பு வேலிகள்
மாநில மற்றும் மாநகராட்சி சாலைகளில் முக்கிய பிரமுகர்கள் வரும்போது வேகத்தடைகள் அகற்றப்படுகின்றன. இதனால் தேவையற்ற செலவும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சிக்கு ஏற்படுகிறது. அதுபோல் வேகத்தடைகள் மீது வெள்ளை கோடுகள் போடாததால் இரவு நேரங்களில் விபத்துகளும் நடக்கின்றன. எனவே இதனை தவிர்க்க போக்குவரத்து சிக்கல் இருக்கும் பகுதிகளிலும், வேகத்தடை ஏற்படுத்தப்பட வேண்டிய இடங்களிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கலாம்.
தடுப்பு வேலிகளை நெருக்கமாக வைக்கும்போது வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்லும். முக்கிய பிரமுகர்கள் கடந்துசெல்லும் தேவை இருந்தால் தடுப்பு வேலிகளை அகற்றி, மீண்டும் வைக்கலாம். இதனால் பொருளாதார செலவும் குறையும். இந்த தடுப்பு வேலிகளை அன்பளிப்பாக வழங்க பல்வேறு கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் தயாராக உள்ளன. எனவே செலவும் இருக்காது. அடிக்கடி சாலைகளை தோண்டும் நிலையும் ஏற்படாது. இதுபற்றி அதிகாரிகள் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.