திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கும், உடுமலையில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கும் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட கும்பாபிஷேக விழாக்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் கலந்து கொண்டு, தமது கையால் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழாக்களை நடத்தி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
இதற்காக நேற்று திருப்பூர் வந்த பங்காரு அடிகளாருக்கு மாவட்ட எல்லையான செங்கப்பள்ளியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் திருப்பூர் மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் சரஸ்வதி சதாசிவம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் இயக்கத்தை சேர்ந்த திருப்பூர் ராயபுரம் என்.ராமகிருஷ்ணன், லட்சுமிநகர் ஆர்.சிவானந்தன் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர். இன்றும், நாளையும் நடைெபறும் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் சரஸ்வதி சதாசிவம் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.