மத்திய அரசின் தரச்சான்று பெற்றதொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன்

மத்திய அரசின் தரச்சான்று பெற்ற தொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன், வட்டி சலுகை, ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னுரிமை ஆகியவை வழங்கப்படுகிறது என்று தர்மபுரி கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

Update: 2023-07-12 18:45 GMT

தீயணைப்பான்கள்

தர்மபுரி மாவட்டத்தில் இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பசுமையை பாதுகாத்து கழிவுகளை குறைத்து இயங்கும் தொழிற்சாலைக்கான மத்திய அரசின் ஜெட் தரச்சான்றுகளை பெற்ற 100 நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக தீயணைப்பான்கள் வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி 100 நிறுவனங்களுக்கு தீயணைப்பான்களை வழங்கினார். தொடர்ந்து சிறந்த தொழில் முனைவோருக்கான விருது பெற்ற சந்தோஷ் சிவா அரசின் சார்பில் வழங்கப்பட்ட பாராட்டு கேடயத்தை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் வகையிலும், புதிய தொழிற்சாலைகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் வகையிலும் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பல்வேறு தொழில் கடன் மானியத் திட்டங்கள் தொழில் நிறுவனங்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத பசுமையை பாதுகாத்து கழிவுகளை குறைத்து இயங்கும் தொழில்களுக்கு மத்திய அரசு சார்பில் ஜெட் தரச்சான்று வழங்கப்படுகிறது.

வட்டி சலுகை

மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை சார்பில் ஆய்வுக்குழுவினர் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று வகையான தரச்சான்றுகளை வழங்குகின்றனர். மத்திய அரசின் தரச்சான்று பெற்ற நிறுவனங்களுக்கு வங்கி கடன், வட்டி சலுகை, ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னுரிமை ஆகியவை வழங்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் தரச்சான்றிதழ் பெற்ற 100 நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தீயணைப்பான்கள் வழங்கப்பட்டது. மேலும் மத்திய அரசின் தரச்சான்றிதழ் மூலம் பெறப்படும் சலுகைகள் மற்றும் பிற வாய்ப்புகளை தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் சென்று சேரும் வகையில் உரிய நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் கார்த்திகைவாசன், தென் மண்டல சிறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் கார்த்திகேயன், மாவட்ட தொழில் மையம் தொழில் ஊக்குவிப்பு அலுவலர் வெங்கடேஸ்வரி, கடகத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை தலைவர் சரவணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்