பொள்ளாச்சியில் பரிதாபம்-தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வங்கி ஊழியர் சாவு
பொள்ளாச்சியில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
தனியார் வங்கி ஊழியர்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ஜெகதீஷ்வரன் (வயது 31). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதற்காக சின்னாம்பாளையத்தில் தங்கி இருந்து வங்கிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு டி.கோட்டாம்பட்டியில் இருந்து சின்னாம்பாளையம் நோக்கி அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பல்லடம் ரோட்டில் சூடாமணி கூட்டுறவு சங்கம் எதிரே சாலை அகலப்படுத்துவதற்கு பாலம் கட்டுமான பணி நடைபெறுகிறது.
தடுப்புச்சுவரில் மோதல்
இதன் காரணமாக வாகனங்கள் ஒருவழிப்பாதையில் திருப்பி விடப்பட்டு உள்ளன. அந்த இடத்தில் வந்ததும் திடீரென்று மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜெகதீஷ்வரன் படுகாயம் அடைந்தார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஜெகதீஷ்வரன் இறந்து விட்டதாக கூறினார்கள்.
இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.