வங்கி ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து விவசாயியிடம் ரூ.80 ஆயிரம் மோசடி

பொன்னமராவதியில் விவசாயியிடம் வங்கி ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ரூ.80 ஆயிரம் மோசடி செய்த மர்ம ஆசாமி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2023-01-22 18:32 GMT

விவசாயி

பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுபட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 64), விவசாயி. இவர் கடந்த 15-ந் தேதி காலை 9 மணியளவில் பொன்-புதுப்பட்டியில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுக்க சென்றுள்ளார். ஆனால் பணம் வராததால் புதுவளவு ரோட்டில் உள்ள மற்றொரு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவரிடம் பணம் எடுத்து தருமாறு மாணிக்கம் தனது வங்கி ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார்.

அப்போது அவர் பணம் வரவில்லை என்று மாணிக்கத்திடம் அவரது ஏ.டி.எம். கார்டுக்கு பதிலாக வேறு ஒரு கார்டை கொடுத்துள்ளார்.

ரூ.80 ஆயிரம் மோசடி

பின்னர் சிறிது நேரம் கழித்து மாணிக்கத்தின் செல்போன் எண்ணுக்கு பணம் எடுத்ததாக குறுஞ்செய்திகள் வந்தன. அதில் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.50 ஆயிரமும், புதுக்கோட்டையில் உள்ள ஒரு நகைக்கடையில் ரூ.30 ஆயிரத்திற்கு நகை வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பொன்னமராவதி சப்-இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து விவசாயியிடம் வங்கி ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ரூ.80 ஆயிரம் மோசடி செய்த மர்ம ஆசாமி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்