வாழைத்தார் அறுவடை பணிகள் தீவிரம்

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் தற்போது வாழைத்தார் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விலையும் அதிகமாக கிடைப்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-01-10 20:04 GMT

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் தற்போது வாழைத்தார் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விலையும் அதிகமாக கிடைப்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று பொங்கல் பண்டிகை. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து புது அரிசியில் பொங்கலிட்டி கதிரவனுக்கு படைத்து வழிபாடுவார்கள். இந்த பொங்கல் பண்டிகையில் கரும்பு, மஞ்சள்கொத்து, வாழைப்பழம் போன்றவை முக்கிய இடம் வகிக்கும்.

தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழையும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக காவிரி கரையோர பகுதிகளில் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், தோகூர், திருவையாறு, நடுக்காவேரி, மேலத்திருப்பூந்துருத்தி, கண்டியூர், வளப்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வாழை பயிரிடப்பட்டு உள்ளது.

வாழைத்தார் அறுவடை

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் தஞ்சை மாவட்டத்தில் கண்டியூர், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, வளப்பக்குடி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொங்கல் விற்பனைக்காக வாழைத்தார் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அதிகாலை முதலே வாழைத்தார் அறுவடை செய்யப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் வடுககுடி பகுதியில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் தொழிலாளர்கள் அதிகாலை முதல் வாழைத்தாரை வெட்டி வாகனங்கள் மூலம் ஏற்றி வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். கடந்த மாதம் வரை பூவன் தார் ரூ.100 முதல் விற்பனை செய்யப்பட்டது. பெரிய அளவிலான தார் ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

விலை அதிகரிப்பு

தற்போது பொங்கல் பண்டிகைக்கான தேவை அதிகரித்துள்ளதால் தார் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ரூ100 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தினமும் ஏராளமான சரக்குஆட்டோ, மினி லாரி, லாரிகளில் அதிகஅளவில் வாழைத்தார் அறுவடை செய்யப்பட்டு வெளி இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. தற்போது பெரிய அளவிலான தார் ரூ.600 வரை விலை போவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறுகையில், தற்போது வடுகக்குடி, ஆச்சனூர், வளப்பக்குடி, மருவூர், சாத்தனூர், திருப்பூந்துருத்தி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் வாழைத்தார் அறுவடை செய்யப்பட்டு தஞ்சை, திருவையாறு, திருச்சி, தேனி, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வந்து வாழைத்தார் கொள்முதல் செய்து அவர்களே தொழிலாளர்கள் மூலம் அறுவடை செய்து எடுத்துச்செல்கிறார்கள். தற்போது நல்ல விலை கிடைத்து வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்க, நெருங்க வாழைத்தார் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்"என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்