வால்பாறை அருகே வாழைத்தோட்டம் ஆற்றை தூர்வார வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல்
வால்பாறை அருகே வாழைத்தோட்டம் ஆற்றை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வால்பாறை
வால்பாறை அருகே வாழைத்தோட்டம் ஆற்றை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மழை வெள்ளம்
வால்பாறை பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென் மேற்கு பருவமழை காலம் தொடங்கி விடும். இந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் இரவு, பகலாக கனமழை பெய்வது வழக்கம். அப்போது வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவது வாழைத்தோட்டம் ஆற்றங்கரையோர பகுதியில் வாழ்ந்து வரக்கூடிய மக்கள் தான். அவர்களது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துவிடும். பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதுடன், அவர்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். இது கடந்த 5 ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
இதற்கு காரணம், வாழைத்தோட்டம் ஆற்றில் குவிந்து கிடக்கும் குப்பைகள்தான். அவைகளால்தான், நீரோட்டம் தடைபட்டு வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து வருகிறது. இதை தவிர்க்க, தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு, மாவட்ட நிர்வாகம் சார்பில் இயற்கை பேரிடர் மேலாண்மை திட்டத்தின் மூலம் வாழைத்தோட்டம் ஆற்றில் குவிந்து கிடக்கும் குப்பைகள் மற்றும் மண்ணை தூர்வாரி நீரோட்டம் தடைபடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நடவடிக்கை
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டது. இதனால் வாழைத்தோட்டம் ஆற்றில் தண்ணீர் குறைந்த அளவே செல்கிறது. இதை பயன்படுத்தி ஆற்றில் உள்ள குப்பைகள் மற்றும் அதிகப்படியான மண்ணை அகற்ற வேண்டும். இதன் மூலம் மழைக்காலத்தில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுவது தடுக்கப்படும். மேலும் நாங்களும் பாதுகாப்பாக இருப்போம். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.