வாழைப்பழம் விலை உயர்வு

உடுமலை பகுதியில் வாழைப்பழம் விலை உயர்ந்து நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2022-07-17 20:53 GMT

உடுமலை பகுதியில் வாழைப்பழம் விலை உயர்ந்து நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினசரி பயன்பாடு

விவசாயம் என்பது லாபகரமான தொழிலாக இல்லை என்ற வருத்தம் பல விவசாயிகளுக்கு உள்ளது. இதனால் தங்கள் வாரிசுகளை விவசாயத்தில் ஈடுபடுத்த பெரும்பாலான விவசாயிகள் விரும்புவது இல்லை.

ஆனாலும் பல விவசாயிகள் சவால்களை எதிர்கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். அந்தவகையில் உடுமலை பகுதியில் ஆண்டுப் பயிரான வாழை சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் ஆண்டு முழுவதும் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்ட போதும் அறுவடை சமயத்தில் போதிய விலை கிடைக்காமல் தவிக்கும் நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது வாழைப்பழத்துக்கு நல்ல விலை கிடைத்து வருவது விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

உணவு, பூஜை மற்றும் விழாக்களுக்காக பொதுமக்களின் தினசரி பயன்பாட்டில் வாழைப்பழம் உள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் வாழைப்பழத்துக்கான தேவை இருக்கும்.அத்துடன் வாழையில் இலை, தண்டு, பூ, காய், பழம் மற்றும் நார் என அனைத்துமே தினசரி பயன்பாட்டில் உள்ளது.ஆனாலும் வாழை சாகுபடி என்பது ஆண்டு முழுவதும் பராமரிப்பு என்ற வகையில் கணக்கிடும்போது போதிய வருமானம் தருவதாக இல்லை.

பலத்த காற்று

உடுமலை பகுதியில் தனிப்பயிராகவோ, தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கிடையில் ஊடுபயிராகவோ வாழை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. திட்டமிட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடவு செய்யும் விவசாயிகளுக்கு சீரான இடைவெளியில் அறுவடை செய்வதன் மூலம் விலை குறைவால் ஏற்படும் பாதிப்புகளை ஒருசில விவசாயிகள் தவிர்க்கின்றனர்.

நமது பகுதியைப் பொறுத்தவரை பூவன், ரஸ்தாளி, தேன் கதலி, கற்பூரவள்ளி போன்ற ரகங்கள் அதிக பயன்பாட்டில் உள்ளது. இதுதவிர செவ்வாழை சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுவாக ஆடி மாதத்தில் தான் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். ஆனால் கடந்த சில வாரங்களாகவே அதிக வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளாத வாழை மரங்கள் பலத்த காற்றினால் முறிந்து சேதமடைந்துள்ளன.

இதனால் சந்தைக்கு வாழைத்தார்களின் வரத்து குறைவாகவே உள்ளது. அத்துடன் ஆடி மாதத்தில் கோவில் திருவிழாக்கள் போன்றவை நடைபெறுவதால் வாழைப்பழங்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதனால் தற்போது வாழைத்தார்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. ஆனாலும் சில்லறை விலையோடு ஒப்பிடும்போது விவசாயிகளிடம் மிகக்குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது சில்லறை விற்பனையில் ஒரு பூவன் பழம் ரூ. 8 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்