முறைகேட்டில் ஈடுபட்ட 22 உரக்கடைகளில் விற்பனைக்கு தடை-விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தகவல்

முறைகேட்டில் ஈடுபட்ட 22 உரக்கடைகளில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-22 20:46 GMT

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பேசும் போது கூறியதாவது:-

விவசாய நிலங்களுக்கு செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் வயல்களுக்கு செல்லும் போது மின்சாரத்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரிப்படுத்த வேண்டும். பட்டா மாறுதல், கிரைய பத்திரங்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர் சந்தைகளில் காய்கள் விலை மற்றும் உரம், பூச்சி மருந்துகளின் விலையை ஒழுங்குபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

விற்பனைக்கு தடை

அதற்கு பதில் அளித்து கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

தமிழக அரசு விவசாயிகள் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து மாவட்டத்தில் வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதன்படி 495 உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் முறைகேட்டில் ஈடுபட்ட 22 கடைகளில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதே போன்று 23 கடைகளில் முறையாக இருப்பு பராமரிக்காமல் இருந்தது, பதிவேடுகள் முறைப்படுத்தாமல் இருந்த 38 கடைகள், விற்பனை பட்டியல் வைக்காத 3 கடைகள், மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்காத 7 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவு உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

விலைப்பட்டியல்

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் மற்றும் சேதமடைந்த மின் கம்பங்களை விபத்துக்கள் ஏற்படாத வகையில் உடனுக்குடன் சரி செய்ய மின்சார துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. உழவர் சந்தை, உரக்கடைகளில் விலைப்பட்டியல் முறைப்படுத்தப்படும்.

இவ்வாறு கலெக்டர் கார்மேகம் பேசினார்.

முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த விதைகள் மற்றும் நாற்றுகளின் தரம் குறித்த கண்காட்சியை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார்.

கூட்டத்தில், உதவி கலெக்டர் சுவாதி ஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்