பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு

நெல்லை-பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க மத்திய ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2023-08-18 19:50 GMT

நெல்லை-பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க மத்திய ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில்

நெல்லை சந்திப்பில் இருந்து சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக கேரள மாநிலம் பாலக்காடு வரை பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க மத்திய ரெயில்வே வாரியம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி பாலக்காடு- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:- 16791) பாலக்காட்டில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு நெல்லை சந்திப்பை வந்தடைகிறது. அங்கிருந்து 4.55 மணிக்கு புறப்பட்டு காலை 7 மணிக்கு தூத்துக்குடி சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் (வண்டி எண்:- 16792) தூத்துக்குடியில் இருந்து இரவு 9.25 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் இரவு 11.15 மணிக்கு நெல்லை சந்திப்புக்கு வருகிறது. அங்கிருந்து வழக்கம்போல் 11.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12 மணிக்கு பாலக்காடு சென்றடையும்.

குருவாயூர்-மதுரை

இதேபோல் குருவாயூர்-புனலூர், கொல்லம்-செங்கோட்டை மற்றும் செங்கோட்டை-மதுரை ஆகிய 3 பாசஞ்சர் ரெயில்களையும் ஒருங்கிணைத்து குருவாயூர்-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ரெயில் (வண்டி எண்:- 16327) மதுரையில் இருந்து பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு, செங்கோட்டைக்கு மாலை 3.20 மணிக்கு வந்து 3.25 மணிக்கு மீண்டும் புறப்பட்டு, குருவாயூரை இரவு 2.10 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் (வண்டி எண்:- 16328) குருவாயூரில் இருந்து அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு மாலை 3.40 மணிக்கு வந்து, 3.45 மணிக்கு மீண்டும் புறப்பட்டு மதுரையை இரவு 7.15 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயில்கள் வருகிற 27, 28-ந் தேதிகளில் இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்