55 பேருக்கு ரூ.3.32 கோடி நிலுவைத்தொகை
மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற 55 பேருக்கு ரூ.3 கோடியே 32 லட்சம் நிலுவையைத்தொகையை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற 55 பேருக்கு ரூ.3 கோடியே 32 லட்சம் நிலுவையைத்தொகையை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
ஓய்வு பெற்ற பணியாளர்கள்
சேலம் மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர்கள், பணியாளர்கள், வாரிசுதாரர்கள் என மொத்தம் 55 பேருக்கு ரூ.3 கோடியே 32 லட்சம் ஓய்வூதிய நிலுவைத்தொகை வழங்கும் விழா மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ஓய்வூதியத்தொகைக்கான காசோலைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகைகளை உடனே வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சேலம் மாநகராட்சியில் 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஓய்வுகால பணிக்கொடை, ஓய்வூதிய தொகை, தொகுப்பு தொகை மற்றும் பிற நிலுவைத்தொகைகள் வழங்கப்படாமல் இருந்துவந்தது.
நிலுவைத்தொகை
தற்போது பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் வாரிசுதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தற்போது 55 பேருக்கு ரூ.3 கோடியே 32 லட்சம் நிலுவைத்தொகை வழங்கி அவர்களின் 5 ஆண்டு கால எண்ணங்கள் நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் இந்த அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும் அரசாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனா, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தலைமை பொறியாளர் செந்தில்குமார், மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகர், கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கவுதம் சிகாமணி, கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கண்காணிப்பு பொறியாளர் ரவி, துணை ஆணையாளர் அசோக்குமார், நகர் நல அலுவலர் யோகானந், மண்டல குழுத்தலைவர் உமாராணி, முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.