குடிமங்கலம் ஒன்றியத்தில் ராமச்சந்திராபுரம் அருகே உப்பாறு ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
உப்பாறு ஓடை
குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. உப்பாறு ஓடையில் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் உப்பாறு அணைக்கு செல்கிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பெறுகிறது.குடிமங்கலம் ஒன்றியத்தில் உப்பாறு ஓடையின் குறுக்கே பல இடங்களில் தரைப் பாலங்கள்கட்டப்பட்டுள்ளன.
மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தரைப்பாலத்தின் வழியாக வாகனங்களில்செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த ஆண்டு குடிமங்கலம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக உப்பாறு ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ராமச்சந்திராபுரம் அருகே சலவ நாயக்கன்பட்டி வடக்கு பள்ளம் பகுதியில் தரைப்பாலத்தை தாண்டி அதிகளவு தண்ணீர் சென்றது.
கோரிக்கை
தரைப்பாலத்தை ஆட்டோவில் கடந்து செல்ல முயன்ற சின்னச்சாமி என்பவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். அவரது மகன் உயிர் தப்பினார். தற்போதும் அந்தப் பாலம் உயர்மட்ட பாலமாக மாற்றப்படாமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
இதனால் தரைப்பாலம் வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.உப்பாறு ஓடையில் தண்ணீர் வருவதற்கு முன்பாக தரைப் பாலத்தை உயர் மட்டபாலமாக தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.