தஞ்சையில் பிரபல ரடிவு வெட்டிக்கொலை செய்யப்பட்டது ஏன்? - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

தஞ்சையில் பிரபல ரடிவு குருந்தையன் நேற்று முன்தினம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.;

Update:2025-03-13 12:57 IST
தஞ்சையில் பிரபல ரடிவு வெட்டிக்கொலை செய்யப்பட்டது ஏன்? - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

தஞ்சை,

தஞ்சையை அடுத்த ஏழுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் குருந்தையன் (வயது 50). பிரபல ரவுடி. இவருடைய மனைவி ஜெயபிரதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் குருந்தையன் வல்லம்-ஒரத்தநாடு ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த காரை மர்ம நபர்கள் மோத விட்டனர். இதில் தூக்கி வீசப்பட்ட குருந்தையனை காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இதில் குருந்தையன் சம்பவ இடத்திலேயே பிணமானார்.

இது குறித்து வல்லம் போலீஸ் நிலையத்தில் குருந்தையன் மனைவி ஜெயபிரதா அளித்த புகாரின் பேரில் போலீசார் ஏழுப்பட்டியை சேர்ந்த முத்துமாறன், ஒத்தக்கை ராஜா, மாதாக்கோட்டையை சேர்ந்த வில்சன், பல்லடத்தை சேர்ந்த வடிவேலன் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மணிமாறனின் மனைவி போட்டியிட்டார். அப்போது இவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக குருந்தையன் வேலை செய்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பினர் குருந்தையனுடன் இருந்தவர்களை ஆள் வைத்து பிரச்சினை செய்ததுடன் அடிதடி தகராறு ஏற்பட்டது. இதில் காயம் அடைந்தவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இதை அறிந்த குருந்தையன் ஆஸ்பத்திரிக்கு சென்றபோது மணிமாறன் மகன் உலகநாதனுடன் பிரச்சினை ஏற்பட்டு அதில் உலகநாதன் கொலை செய்யப்பட்டார். இதனால் மணிமாறன் குடும்பத்திற்கும், குருந்தையன் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 2015-ம் ஆண்டு குருந்தையன் கொல்லையில் போர்போடும்போது அவரை கொலை செய்யும் நோக்கில் கழுத்தில் வெட்டியதில் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தற்போது முன்விரோதம் காரணமாக பழிக்குபழியாக குருந்தையன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்