சீமான் பாதுகாவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன்
நடிகை வழக்கில் சீமான் வீட்டு கதவில் ஒட்டப்பட்ட நோட்டீஸை கிழித்த விவகாரத்தில் 2 பேர் கைதானார்கள்.;

சென்னை,
சீமான் வீட்டு வாசலில் ஒட்டப்பட்ட சம்மனை அவரது வீட்டில் உதவியாளராக பணிபுரியும் சுபாகர் கிழித்ததால் போலீசாருடன் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக சுபாகரையும், சீமான் வீட்டின் பாதுகாவலரான அமல்ராஜையும் நீலாங்கரை போலீசார் கைது செய்தனர். அமல்ராஜ் வைத்திருந்த கைதுப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அரசியல் உள்நோக்கத்துடன் தங்களை போலீசார் கைது செய்திருப்பதாகவும், போலீசார் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்றும், துப்பாக்கிக்கு உரிய அனுமதி இருப்பதால் தங்களை ஆயுத தடுப்பு சட்ட பிரிவின்கீழ் போலீசார் கைது செய்திருப்பது சட்டவிரோதமானது என்றும் மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் அருள்செல்வம், இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்றார். அதற்கு மனுதாரர்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவி்க்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, மனுவுக்கு போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இன்று (மார்ச் 13) தள்ளிவைத்தனர். இந்தநிலையில் சீமான் பாதுகாவலர்கள் தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுப் பாதுகாவலருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. தினமும் பூக்கடை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் வழக்கில் மறு உத்தரவு வரும் வரை கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி சுந்தர் மோகன் கூறினார்.