சிதம்பரம் கோவில் தீட்சிதர்களுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

சிதம்பரம் கோவில் தீட்சிதர்களுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.;

Update:2025-03-13 12:04 IST
சிதம்பரம் கோவில் தீட்சிதர்களுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

கோப்புப்படம் 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பக்தர்கள், கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை மீறி பக்தர்களை கனகசபை மீது ஏற விடாமல் தடுத்ததாக தீட்சிதர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகார்களின் அடிப்படையில் சிதம்பரம் நகர போலீசார் தீட்சிதர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பட்டு தீட்சிதர் என்பவர் உள்ளிட்ட 6 பேர் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி இளந்திரையன் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி தீட்சிதர்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய முயன்ற பெண் பக்தரை சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறி தீட்சிதர்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கவுரி சங்கர் தீட்சிதர் என்பவர் உள்ளிட்ட 8 பேர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களையும் தள்ளுபடி செய்து வழக்கை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்