திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பாலாலயம் நிகழ்ச்சி

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பாலாலயம் நிகழ்ச்சியில் வீரகாளியம்மன், சங்கிலி பூதத்தார், இடும்பன் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது.

Update: 2023-09-21 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் நேற்று நடந்த பாலாலயம் நிகழ்ச்சியில் வீரகாளியம்மன், சங்கிலி பூதத்தார், இடும்பன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பெருந்திட்ட வளாகப்பணி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் தமிழக அரசு மற்றும் ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.300 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப்பணிகள் நடந்தது வருகிறது. மேலும் இதோடு கோவில் மகா கும்பாபிஷேக திருப்பணிகளும் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக பணிகளுக்காக ஏற்கனவே கோவில் கிழக்கு கோபுரம், சால கோபுரம் (சண்முக விலாசம் வாசல்) மற்றும் ராஜகோபுரம் போன்றவைகளுக்கு பாலாலயம் நடந்தது.

பாலாலயம் நிகழ்ச்சி

இதையடுத்து நேற்று ராஜகோபுரம் அருகே உள்ள வீரகாளியம்மன், சங்கிலி பூதத்தார் மற்றும் சுந்தர விநாயகர், இடும்பன் கோவில் போன்றவைகளுக்கு பாலாலயம் நடந்தது. இதை முன்னிட்டு ராஜகோபுரம் அடிவாரத்தில் நேற்று காலையில் கோவில் விதாயகர்த்தா சிவசாமி தீட்சிதர் தலைமையில் சங்கரய்யர் குழுவினரால் கும்பங்கள் வைக்கப்பட்டு கணபதி பூஜை, மஹா சங்கல்பம், பாலாலய பூஜை, மூலமந்திர ஜெபம், மஹா கணபதி ஹோமம், துர்கா ஹோமம், பால ஸ்தாபனம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மரத்திலான சுந்தர விநாயகர், வீரகாளியம்மன், இடும்பன் சுவாமி மற்றும் சங்கிலி பூதத்தார் சிற்பங்களுக்கு ஆவாஹனம் செய்யப்பட்டது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்ப நீரால் அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில், கோவில் இணை ஆணையர் கார்த்திக், துணை ஆணையர் வெங்கடேசன், ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சார்பில் பிரவீன், கோவில் கண்காணிப்பாளர்கள் ராஜேந்திரன், வேதமூர்த்தி, பேஸ்கார் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில்முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்