விபத்தில் இறந்த மகனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க தோட்ட உரிமையாளருக்கு ஜாமீன்

விபத்தில் இறந்த மகனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க தோட்ட உரிமையாளருக்கு ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2022-10-25 19:21 GMT

விருதுநகர் மாவட்டம் வாடியூர் பகுதியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமாக இருந்ததால், தோட்டத்தை சுற்றிலும் மின்வேலி அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு கடந்த வாரம் முதலிப்பட்டியை சேர்ந்த டிரைவர் சீனிவாசன், முனியசாமி ஆகியோர் குளிக்கச்சென்றனர்.

அப்போது தோட்டத்தின் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து இருவரும் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து, தோட்ட உரிமையாளர் மோகன்ராஜை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தீபாவளி அன்று மோகன்ராஜின் மகன் சிலம்பரசன், வாகன விபத்தில் சிக்கி பலியானார். இதையடுத்து அவருக்கு இறுதிச்சடங்குகளை செய்வதற்காக சிறையில் இருக்கும் மோகன்ராஜ், தனக்கு இடைக்கால ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் அவசர மனுவை தாக்கல் செய்தார். தீபாவளி பண்டிகை தினத்தன்று மாலை 6 மணி அளவில் இந்த மனு அவசர வழக்காக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆர்.வெங்கடேசன் ஆஜராகி, விபத்தில் இறந்த சிலம்பரசனுக்கு 3 பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளனர். எனவே அவருக்கு இறுதிச்சடங்குகளை தந்தை என்ற முறையில் மனுதாரர் செய்வதற்காக இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார். விசாரணை முடிவில், மனுதாரர் மீது ஒரேயொரு குற்றச்சாட்டு தான் உள்ளது. அவரது ஒரே மகனை இழந்துள்ளார். இடைக்கால ஜாமீன்தான் அவர் கேட்டுள்ளார். அவரதுசூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த கோர்ட்டு ஜாமீனில் விடுவிக்க உத்தரவிடுகிறது. போலீசார் அழைத்தால் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்