'பத்ரி சேஷாத்ரி கைது; ஜனநாயகத்துக்கு எதிரான பாசிச நடவடிக்கை' - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. விமர்சனம்

பத்ரி சேஷாத்ரியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-30 18:28 GMT

சென்னை,

கும்பகோணத்தைச் சேர்ந்த பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி. பா.ஜ.க. ஆதரவாளரும், வலதுசாரி சிந்தனையாளருமான இவர், மணிப்பூர் கலவரம் குறித்து பல்வேறு தனியார் செய்தி நிறுவனங்களின் நிகழ்ச்சிகள், யூ-டியூப் சேனல்களில் பேட்டி அளித்து வந்தார்.

இவர் அளித்த பேட்டி ஒன்றில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி பத்ரி சேஷாத்ரி மீது குன்னம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பத்ரி சேஷாத்ரியை சென்னையில் நேற்று கைது செய்தனர்.

இந்த நிலையில் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான பாசிச நடவடிக்கை என பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"கிழக்கு பதிப்பக உரிமையாளரும், எழுத்தாளருமான பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக யூ-டியூப் சேனல் ஒன்றில் பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக அறிகிறேன். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு.க. அரசின் தவறுகளை, அடக்குமுறைகளை யாரும் பேசவோ, எழுதவோ கூடாது என்பதற்காக, திமுக அரசை எதிர்ப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிடுபவர்களை தமிழக அரசு கைது செய்து வருகிறது. சமூக ஊடகங்களில் கருத்து பதிவிடுவதற்கெல்லாம் கைது செய்யப்பட வேண்டுமெனில், திமுகவினரில் பெரும்பாலானோர் நிரந்தரமாக சிறையில்தான் இருக்க வேண்டும்.

கணித நிபுணரான பத்ரி சேஷாத்ரி, கணிதம் தொடர்பாக தமிழில் பல புத்தகங்களை எழுதி இருப்பவர். சமூகத்தை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக துணிச்சலுடன் தனது கருத்துகளை தெரிவித்து வருபவர். திமுகவுக்கு மாற்றான சிந்தனைகளையும், தமிழக அரசின் தவறுகளையும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் என்பதால், அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இது ஜனநாயகத்துக்கு எதிரான பாசிச நடவடிக்கை. அடக்குமுறை மூலம் அரசுக்கு எதிரான குரலை ஒடுக்கிவிடலாம் என்று நினைப்பது நடக்கவே நடக்காது. இது தொழில்நுட்ப யுகம். பொய்களை சொல்லி மக்களை இனி ஏமாற்ற முடியாது. எனவே, பாசிச நடவடிக்கைகளை கைவிட்டு பத்ரி சேஷாத்ரியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது பதியப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்