வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி
வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வருபவர் நித்யா. கர்ப்பிணியான இவருக்கு வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மகளிர் போலீஸ் நிலையத்தை அலங்காரம் செய்து, நித்யாவிற்கு மாலை அணிவித்து, 9 வகையான சாதங்கள் பறிமாறி, வளையல் அணிவித்து போலீசார் வாழ்த்தினர். இதில் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி, வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, முத்தமிழ்செல்வி மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.