பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்வு
பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகமாக இருப்பதையொட்டி அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகமாக இருப்பதையொட்டி அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பரவலாக மழை
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணையான பாபநாசம் அணை மேற்கு தொடர்ச்சி மலை உள் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது.
இதையொட்டி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 1,521 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணை நீர்மட்டம் 59.40 அடியில் இருந்து 2.60 அடி உயர்ந்து 62 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்துக்காக தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு 580 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 80.35 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 44.10 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 90 கன அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 17.50 அடியாக உள்ளது. நீர்வரத்து 36 கன அடியாக உள்ளது.
கடனாநதி அணை
தென்காசி மாவட்டத்தில் ஆழ்வார்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கடனாநதி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 90 கன அடியாக அதிகரித்துள்ளது. இதையொட்டி அணை நீர்மட்டம் 1½ அடி உயர்ந்து 48.10 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு 30 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ராமநதி அணை நீர்மட்டமும் 1 அடி உயர்ந்து 56 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 85.75 அடியாகவும் உள்ளது.
மழை அளவு
நெல்லை தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாபநாசம் -2, மணிமுத்தாறு -1, மாஞ்சோலை -4, காக்காச்சி -5, நாலுமுக்கு -1, களக்காடு -1, செங்கோட்டை -2, கடனா -15, குண்டாறு -8.