மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த பாகுபலி யானை-பொதுமக்கள் பீதி
மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த பாகுபலி யானை-பொதுமக்கள் பீதி;
மேட்டுப்பாளையம்
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கோடை வெயிலின் தாக்கத்தால் வனத்தை விட்டு வெளியேறி உணவு மற்றும் தண்ணீரைத் தேடி வரும் காட்டு யானைகளால் இப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. காட்டு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதி வழியே அடிக்கடி கடந்து சென்றபடி உள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் மற்றும் வனத்தையொட்டியுள்ள கிராம மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். நேற்று காலை நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி காட்டு யானை பவானியாற்றில் தாகம் தீர தண்ணீரை குடித்து விட்டு சமயபுரம் பகுதியில் இரண்டு புறமும் குடியிருப்புகள் உள்ள சிறிய சாலை வழியே கம்பீரமாக நடந்து சென்று வனப்பகுதிக்குள் சென்றது. இரவு நேரத்தில் நடமாடிய யானை தற்போது விடிந்த பின்பும் குடியிருப்புகள் வழியே கம்பீரமாக உலா வருவது இப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறுவதை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு பணிக்கு கூடுதல் வன பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.