ஆழியாறு படுகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பொள்ளாச்சியில் ஆழியாறு படுகை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Update: 2022-06-07 16:00 GMT

பொள்ளாச்சி, 

ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பொள்ளாச்சியில் ஆழியாறு படுகை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகள் எதிர்ப்பு

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் (பி.ஏ.பி.) மூலம் ஆழியாறு, பாலாறு படுகையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 4 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதை தவிர ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு ஒப்பந்தப்படி 7¼ டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் கோவை குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.

இதற்கிடையில் நீர் பற்றாக்குறை காரணமாக பாசனத்திற்கும், குடிநீருக்கும் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் நீர்பங்கீடு செய்வதில் தமிழக-கேரளா இடையேயும், ஆழியாறு, பாலாறு படுகை விவசாயிகளிடையேயும் ஆண்டுதோறும் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த நிலையில் ஆழியாறில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீரை கொண்டு சென்று ரூ.930 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆழியாறு பழைய, புதிய ஆயக்கட்டு விவசாயிகள் பொள்ளாச்சியில கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு புதிய ஆயக்கட்டு பாசன சங்க தலைவர் அசோக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் பழைய ஆயக்கட்டு பாசன சங்க தலைவர் ராஜாமணி, செயலாளர் வித்யாசாகர், புதிய ஆயக்கட்டு பாசன சங்க செயலாளர் செந்தில், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன் மற்றும் விவசாயிகள் 2 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அதன் பின்னர் ஆழியாறு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன சங்கங்கள் சார்பில் சப்-கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

ஆனைமலையாறு-நல்லாறு திட்டம்

புதிய ஆயக்கட்டு பாசன சங்க செயலாளர் செந்தில் கூறியதாவது:-

இந்த ஆர்ப்பாட்டம் விவசாயத்திற்கான பிரச்சினை மட்டுமல்ல. குடிநீருக்கும் சேர்ந்து இருப்பதால் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஒட்டன்சத்திரம் பகுதிக்கு எத்தனையோ மாற்று திட்டங்கள் உள்ளன. பி.ஏ.பி. திட்டத்தில் ஏற்கனவே 4.25 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு போதிய தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது. மாற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இங்கிருந்து ரூ.930 கோடி செலவு செய்து தண்ணீரை கொண்டு செல்வதற்கு பதிலாக, பி.ஏ.பி. திட்டத்தில் நீர் பற்றாக்குறையை போக்குவதற்கு நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றினால் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகள் கொடுத்த மனுக்கள் மீது எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்திற்கு டெண்டர் விட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விவசாய நிலங்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் கருணை காட்டுவார் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர் போராட்டம்

பழைய ஆயக்கட்டு சங்க செயலாளர் வித்யாசாகர் கூறியதாவது:-

ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொடுக்க யாரும் கோரிக்கை வைக்கவும், பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றவும் இல்லை. ஆழியாறில் இருந்து தண்ணீர் கொண்டு சென்றால் பி.ஏ.பி. திட்டத்தின் பாசனம் கேள்விக்குறியாகி விடும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து திட்டத்தை கைவிட வேண்டும். இல்லையெனில் விவசாயிகள் ஒன்றிணைந்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்