ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு

சட்டவிரோதமாக தன்னை கைது செய்ததாக கூறி ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையை மதுரை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.

Update: 2022-11-10 20:00 GMT

சட்டவிரோதமாக தன்னை கைது செய்ததாக கூறி ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையை மதுரை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.

விவசாய சங்க தலைவர்

திருச்சியைச் சேர்ந்த அய்யாகண்ணு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவராக உள்ளேன். மாணவப்பருவத்தில் இருந்தே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறேன்.

கடந்த 25 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்டு வருகிறேன். வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்யக்கோரி போராடி வருகிறோம். இந்த நிலையில் கடலூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையானது, விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்புகளுக்கு உரிய தொகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. விவசாயிகளுக்கு சேர வேண்டிய தொகையை வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களில் நாங்கள் ஈடுபட்டு வந்தோம். ஆனால் அந்த தனியார் சர்க்கரை ஆலை சுமார் 7 ஆயிரம் விவசாயிகள் பெயரில் மோசடியாக கடன் பெற்றுள்ளது.

இதற்கிடையில், அந்த சர்க்கரை ஆலை நிறுவனம் திவாலானதாக அறிவிக்க நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, அதன் பேரில் சர்க்கரை ஆலையின் சொத்துக்களை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சட்ட விரோதமானது

இந்த நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த மாதம் 17-ந்தேதி நடந்த கூட்டத்தில் நான் பங்கேற்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டேன். அப்போது என் வீட்டின் முன் வந்த ஓரையூர் போலீசார் என்னை தடுத்து கைது செய்தனர்.

இதே போல எங்கள் சங்கத்தை சேர்ந்த 12 பேரையும் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. எனவே இதற்காக எனக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

ஒத்திவைப்பு

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த வழக்கு விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்