உலக ரத்ததான தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி

ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி சார்பில், உலக ரத்ததான தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நடந்தது.

Update: 2022-06-14 14:05 GMT

ஊட்டி, 

உலக ரத்ததான தினம் ஆண்டுதோறும் ஜூன் 14-ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி சார்பில், விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நேற்று நடந்தது. பேரணியை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊட்டி சேரிங்கிராசில் இருந்து காபி ஹவுஸ், மாரியம்மன் கோவில் வழியாக ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனை வரை சென்றது. பேரணியில் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி, நர்சிங் கல்லூரி மாணவ-மாணவிகள் 176 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் ரத்ததான தினம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். இதைத்தொடர்ந்து 3 முறை மற்றும் அதற்கு மேலாக ரத்ததானம் செய்த 23 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார். அப்போது கலெக்டர் அம்ரித் கூறும்போது, விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக காப்பாற்ற ரத்தம் தேவைப்படுகிறது. ரத்ததானம் செய்வது குறித்து நண்பர்களிடம் எடுத்துக்கூறி ரத்ததானம் செய்ய ஊக்குவிக்க வேண்டும். இதே போன்று அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும் என்றார். இதில் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி டீன் மனோகரி, இருப்பிட மருத்துவர் ரவிசங்கர் மற்றும் டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், நர்சுகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்