மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி

வறட்சியை கட்டுப்படுத்தும் வகையில், கரூரில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;

Update:2023-10-20 23:48 IST

விழிப்புணர்வு பேரணி

தமிழகத்தில் கடந்த 2000-2002-ம் ஆண்டு கால கட்டத்தில் வறட்சி நிலவியபோது, தமிழக அரசு மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அறிவித்தது. அதன்படி கடந்த 2002-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக மாநிலத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்கும் வகையில் சட்ட திருத்தமும் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை எப்படி ஏற்படுத்த வேண்டும் என்று வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புத்திட்டம், வரைபடத்தில் இருந்தால்தான் வீடு கட்ட அனுமதிக்கப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது.

அந்த அளவுக்கு இத்திட்டத்தில் தமிழக அரசு முனைப்பு காட்டியது. அதன் தொடர்ச்சியாக சாதாரண வீடு தொடங்கி பெரிய கட்டிடங்கள்வரை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் துரித கதியில் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்ட விளையாட்டு மைதானம் வரை சென்று நிறைவடைந்தது.

துண்டு பிரசுரம்

இதில் "வான் மழை நீரை மாசு இல்லாமல் காப்போம், தாகம் தீர்க்கும் குடிநீர் தரமான குடிநீர், தேக ஆரோக்கியம் காக்கும் நல் மருந்து மழைநீர், நமது உயிர் நீர் என சூளுரைப்போம் அதனை மனதில் செதுக்குவோம், மரம் வளர்ப்போம் மழைநீர் சேகரிப்போம், நீரினால் பரவும் நோய் இனி இல்லை என்போம் என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும், பொதுமக்கள் கூடும் இடங்களான கோட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய அலுவலகங்களிலும், ரேஷன் கடை மற்றும் அரசு அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து துண்டு பிரசுரம் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

குறும்படம்

முன்னதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. பின்னர் மழை நீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், நிர்வாக பொறியாளர்கள் வீராசாமி, லலிதா, உதவி பொறியாளர் சிவராஜ், உதவி நிலை நீர் வல்லுனர் இளமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்