விழிப்புணர்வு பேரணி
மாற்றுத்திறன் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு பேரணி
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை, கீழப்பாவூர் வட்டார வளமையத்தின் சார்பாக மாற்றுத்திறன் மாணவர்களைக் கண்டறிதல் மற்றும் பள்ளியில் சேர்த்தல் குறித்த குறுவளமைய அளவிலான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணி பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் பேரணிக்கு தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் தர்மராஜ் வரவேற்றார். பேரணியில் மாணவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறன் குழந்தைகளைக் கண்டறிதல் மற்றும் பள்ளியில் சேர்த்தல் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளைப் பிடித்துக் கொண்டும், விழிப்புணர்வு குறித்த வாசகங்களை முழங்கியும் பள்ளி வளாகத்தில் இருந்து பாவூர்சத்திரம் பஸ் நிலையம் வரை சென்று திரும்பினர்.
இதேபோல் பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை ஜான்சிராணி தலைமையில் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியில் ஆசிரியர்கள், ஆசிரியைகள், பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், மற்றும் இயன்முறை மருத்துவர்கள கலந்து கொண்டனர்.