போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராணிப்பேட்டையில் போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தனர்.

Update: 2023-06-26 13:29 GMT

ராணிப்பேட்டையில் போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இடையே போதை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை கலெக்டர் வளர்மதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் மாணவர்களுடன் சேர்ந்து போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

அப்போது கலெக்டர் வளர்மதி பேசியதாவது:-

தகவல் தெரிவிக்கலாம்

போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் இளைஞர்களுக்கு உடல் ஆரோக்யம் பாதிக்கப்படுவதோடு எதிர்காலம் கேள்விக்குறியாகும் அவல நிலை ஏற்படுகிறது. ஆகவே போதைப்பொருட்களை எந்த சூழலிலும் நீங்கள் பயன்படுத்த கூடாது.

மாணவர்கள் தங்களது பகுதிகளில் நடைபெறும் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்தும் நபர்கள் குறித்து 10581 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு புகார் அளிக்கும் தனிநபர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

செல்பி பாயிண்ட்

நிகழ்ச்சியில் ஆசிரியர்களின் புதிய முயற்சியாக போதை வேண்டாம் என்ற தலைப்பில் செல்பி பாயிண்ட் அறிமுகப்படுத்தினர்.

ஆர்வம் உள்ள பொதுமக்கள் இங்கு செல்பி எடுத்து அதனை சமூக வலைதளங்களில், போதை வேண்டாம் என பதிவிட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்று கலெக்டர் கூறினார்.

தொடர்ந்து கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் செல்பி பாயிண்டில் நின்று செல்பி எடுத்துக்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வாகன சேவையை கலெக்டர் வளர்மதி, போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்