அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை மையம்

காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.;

Update: 2023-10-21 19:44 GMT

காரியாபட்டி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் அதன் தலைவர் முத்துமாரி தலைமையில் நடைபெற்றது. வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் சண்முகப்பிரியா, போத்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர். அதன் விவரம் வருமாறு:-

கவுன்சிலர் திருச்செல்வம்:- காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கண்மாய்களில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. ஆதலால் கண்மாயில் தண்ணீர் நிரப்ப முடியாத நிலை உள்ளது. எனவே விரைவில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகப்பிரியா:-

சீமைகருவேல மரங்களை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.


தோப்பூர் முருகன்:- மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காரியாபட்டி அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் உயிரிழப்புகளை பிரேத பரிசோதனை செய்ய அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. அங்கு பல மணி நேரம் காத்திருந்து தான் உடல்களை வாங்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சிரமத்தை போக்குவதற்கு காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லாளப்பேரி கிராமத்தில் உள்ள கலையரங்கம் முன்பு பஸ் திரும்ப முடியாத அளவிற்கு பள்ளமாக உள்ளதை சீரமைக்க வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகப்பிரியா:-

காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் உடல் பிரேத பரிசோதனை மையம் அமைக்க கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்.

சிதம்பர பாரதி:-

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் சாலைகள் அமைக்கப்படும்போது அதற்கு திட்ட மதிப்பீட்டில் கிராவல் சேர்க்கப்படுவதில்லை. இனிவரும் காலங்களில் சாலை அமைக்கப்படும்போது கிராவல் சேர்க்கப்பட வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்