சேலம், ஏற்காட்டில் மஞ்சப்பை விற்பனை செய்யும் தானியங்கி எந்திரத்தை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.
மஞ்சப்பை தானியங்கி எந்திரம்
தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாக பகுதிகளில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை எந்திரங்கள் தனியார் பங்களிப்பு மூலம் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை எந்திரத்தின் செயல்பாட்டினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மக்கள் கூடும் இடங்களில்...
இதில் கலெக்டர் கார்மேகம் கலந்துகொண்டு தானியங்கி மஞ்சப்பை விற்பனை எந்திரத்தின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் இதுகுறித்து கூறியதாவது:-
மாவட்டத்தில் முதற்கட்டமாக ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 3 தானியங்கி மஞ்சப்பை விற்பனை எந்திரங்களின் செயல்பாடுகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த தானியங்கி மஞ்சப்பை விற்பனை எந்திரங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும், சுற்றுலாத்தளமான ஏற்காடு ஆகிய பகுதிகளில் உள்ள வணிக வளாகப்பகுதிகளில் அமைக்கப்பட உள்ளன.
பொதுமக்கள் இந்த தானியங்கி மஞ்சப்பை விற்பனை எந்திரத்தில் ரூ.10-யை நாணயமாகவோ, ரூபாய் நோட்டாகவோ அல்லது 2 ஐந்து ரூபாய் நாணயமாகவோ, செல்போனில் இருந்து மின் பண பரிவர்த்தனை மூலமாக செலுத்தி மஞ்சப்பையினை பெற்றுக்கொள்ளலாம். மாவட்டத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளிலும் இதுபோன்ற தானியங்கி மஞ்சப்பை விற்பனை எந்திரங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளர் செந்தில்விநாயகம், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ரகுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.