தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது - டி.டி.வி. தினகரன்

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

Update: 2024-10-09 08:37 GMT

கோப்புப்படம் 

சென்னை,

அடிப்படை உரிமைகளுக்காக போராடும் சாம்சங் நிறுவன ஊழியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுப்பதாக கூறி நான்கு வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொழிலாளர்களின் சட்டப்பூர்வமான உரிமைகளில் ஒன்றான தொழிற்சங்கத்தை அமைக்கும் முடிவுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய தமிழக அரசு, தொடக்கம் முதலே சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருவதும், போராட்டத்தை ஒடுக்க முயற்சிப்பதும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் பிரதிநிதிகளை இரவு நேரத்தில் வீடு தேடிச் சென்று கைது செய்வதும், போராட்டத்தில் பங்கேற்கச் செல்லும் தொழிலாளர்களை கைது செய்ய பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்வதும்தான் தொழிலாளர் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சியா? என தொழிலாளர்களே சரமாரியான கேள்விகளை எழுப்புகின்றனர்.

எனவே, காவல் துறையால் கைது செய்யப்பட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்