காட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதா...? - டி.டி.வி.தினகரன் ஆவேசம்

விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்கு தடைபோடும் தி.மு.க அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

Update: 2024-11-15 08:00 GMT

கோப்புப்படம்

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் காட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதா ? - விளிம்பு நிலை மக்களின் கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் தடைபோடும் தி.மு.க அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், சாதி சான்றிதழ் வழங்கக் கோரி தங்கள் குழந்தைகளுடன் 8வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மதுரை மாவட்டத்தில் இயங்கிவரும் பல்வேறு பள்ளிகளில் படிக்கும் காட்டு நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு கடந்த ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த சாதி சான்றிதழ் நடப்பாண்டில் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காட்டுநாயக்கர் சமுதாய பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவதோடு, அனைத்து சமுதாயத்தினருக்கும் வழங்கப்படுவதை போல இவர்களுக்கும் சாதி சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், தி.மு.க அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்