ஆட்டோ-டாக்சி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
ஆட்டோ-டாக்சி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆட்டோ தொழிலையும், ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட பெரம்பலூர் மாவட்ட 3 பிளஸ் 1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் ரெங்கநாதன், பொருளாளர் இன்பராஜ் ஆகியோர் சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ஆன்லைன் அபராதத்தில் இருந்து ஆட்டோவுக்கு விலக்கு அளித்திட வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதை கைவிட வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவின்படி மீட்டர் கட்டணத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும். அரசின் ஆட்டோ செயலியை தொடங்கிட காலதாமதம் செய்வதை கைவிட வேண்டும். புதிய ஆட்டோக்களுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் என்ற தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.