கொல்லங்கோடு:
கொல்லங்கோடு அருகே பாத்திமாநகர் பகுதியில் பாலம் உள்ளது. இந்த பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையில் மண்ணரிப்பு சேதமடைந்தது. இதனால், பாலம் வழியாக வானங்கள் செல்லமுடியாதநிலை ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி கொல்லங்கோடு போலீசார் பாலம் பகுதியில் தடுப்பு ேவலிகளை அமைத்தனர். சிலர் அந்த தடுப்பு வேலிகளை அகற்றி அந்த வழியாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு சேதமடைந்த பாலம் வழியாக சென்ற ஆட்டோ ஒன்று திடீரென நிலைதடுமாறி 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதுபற்றி தகவல் அறிந்த கொல்லங்கோடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆட்டோ டிரைவர் மற்றும் 2 பெண்களும், ஒரு குழந்தையும் விபத்தில் சிக்கி இருந்தது தெரியவந்தது. படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.