ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு

திருச்செந்தூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2022-05-29 14:10 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே ரோட்டில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

ஆட்டோ டிரைவர்

நெல்லை மாவட்டம், தென்பத்து, சொக்கன் தோப்பை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 59). இவர் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மகள் உமாமகேஸ்வரி (23). இவர் திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலைகிணற்றில் தன் கணவரோடு வசித்து வருகிறார். இந்நிலையில் தனது மகளை பார்ப்பதற்காக செல்லப்பா நேற்று காலையில் தனது ஆட்டோவில் கீழநாலுமூலைக்கிணறுக்கு வந்துள்ளார்.

ரோட்டில் கவிழ்ந்தது

திருச்செந்தூர் அருகே காந்திபுரத்திலிருந்து நடுநாலுமூலைகிணறு செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, ஆட்டோ நிலைதடுமாறி திடீரென்று ரோட்டில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நொறுங்கிய ஆட்டோவுக்குள் பலத்த காயங்களுடன் செல்லப்பா மாட்டிக்கொண்டு அலறினார். அப்போது அவரது தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியதாக கூறப்படுகிறது.

சாவு

அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவரை மீட்டு ஆட்டோவுக்குள் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளனர். ஆனால் அவர் சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திலேயே இறந்து போனார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளை பார்க்க சென்ற தந்தை ஆட்டோ கவிழ்ந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்