ஆட்டோ டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தம்

‘நோ-பார்க்கிங்’கில் நிறுத்தியதால் ரூ.1,500 அபராதம் விதித்ததை கண்டித்து குன்னூரில் ஆட்டோ டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள், போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-12 18:45 GMT

குன்னூர்

'நோ-பார்க்கிங்'கில் நிறுத்தியதால் ரூ.1,500 அபராதம் விதித்ததை கண்டித்து குன்னூரில் ஆட்டோ டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள், போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்டோவுக்கு அபராதம்

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை பொருத்தவரை ஊட்டியை அடுத்து முக்கியத்துவம் பெறுவது, குன்னூர் பகுதிதான். இங்கு சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கிறது. இவர்களை நம்பி குன்னூரில் 800-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சுற்றுவட்டார கிராமப்புற மக்களும் ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனர்.

இந்த நிலையில் குன்னூரில் இருந்து வண்ணாரபேட்டைக்கு ரூ.50 வாடகையில் முகமது பிலால் என்பவர் ஆட்டோவில் பயணியை அழைத்து சென்றார். அப்போது மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு மருந்து கடையில் ஆட்டோவை நிறுத்த பயணி கூறினார். உடனே அங்கு டிரைவர் முகமது பிலால் ஆட்டோவை நிறுத்தினார். அப்போது அங்கு வந்த குன்னூர் நகர போக்குவரத்து போலீசார், நோ-பார்க்கிங் இடத்தில் ஆட்டோவை நிறுத்தியதாக கூறி ரூ.1,500 அபராதம் விதித்தனர்.

வாக்குவாதம்

இதனால் முகமது பிலால் அதிர்ச்சி அடைந்தார். மேலும் மருந்து கடையில் இருந்து பயணி வந்ததும், ஆட்டோவை ஓட்டி சென்றுவிடுவேன் என்று கூறினார். ஆனாலும் போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதை அறிந்த சக ஆட்ேடா டிரைவர்கள் முகமது பிலாலுக்கு ஆதரவாக திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு, அங்கு திரண்டனர். மேலும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மேல்குன்னூர் மற்றும் வெலிங்டன் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்