ஆட்டோ டிரைவரை கடத்தி 3 நாட்கள் அறையில் அடைத்து சித்ரவதை

ஆட்டோ டிரைவரை கடத்தி 3 நாட்கள் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-08-03 18:45 GMT

மணவாளக்குறிச்சி:

ஆட்டோ டிரைவரை கடத்தி 3 நாட்கள் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆட்டோ டிைரவர்

மண்டைக்காடு அருகே உள்ள கோவிலான்விளையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது45). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு மனைவியும், 10 மற்றும் 8 வயதில் 2 குழந்தைகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டுகளாக மனைவி, ஜெயக்குமாரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி காலையில் ஆட்டோ சவாரிக்கு சென்ற ஜெயக்குமார் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவருடைய உறவினர் சசிகுமார் மண்டைக்காடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஆட்டோ டிரைவர் ஜெயக்குமாரை தேடி வந்தனர்.

போலீசில் தஞ்சம்

இந்தநிலையில் ஜெயக்குமார் நேற்று முன்தினம் நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். அவர் போலீசாரிடம் கூறும்போது ஒருவர் கடத்தி சென்று சிவந்திப்பட்டியில் 3 நாட்கள் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக கூறினார். இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீசார் மண்டைக்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து மண்டைக்காடு போலீசார், ஜெயக்குமாரை அழைத்து வந்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அத்துடன் ஆட்டோவும் மீட்கப்பட்டு மண்டைக்காடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதுகுறித்து ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார் கூறியதாவது:-

நானும் மனைவியும் பிரிந்து வசித்து வருகிறோம்.

சவாரிக்கு அழைத்தார்

இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி ஒருவர் ஆடு வாங்க வேண்டும் என்று ஆட்டோவை வள்ளியூருக்கு சவாரிக்கு அழைத்தார். நானும் உண்மை என்று நம்பி சென்றேன். வள்ளியூர் சென்றதும் திருநெல்வேலி செல்ல வேண்டும் என்றார். அங்கு சென்றதும் மீண்டும் சிவந்திப்பட்டி ஊருக்கு செல்ல வேண்டும் என கூறினார். அங்கு சென்றதும் 3 பேரிடம் என்னை ஒப்படைத்துவிட்டு அந்த நபர் சென்றுவிட்டார்.

அவர்கள் என்னை தனியறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தனர். 3 நாட்கள் கடந்்த நிலையில் நான் அவர்களிடம் இருந்து தப்பி சிவந்திப்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தேன். எனவே, சவாரிக்கு அழைத்த நபரை பிடித்து விசாரித்தால் என்னை கடத்தி சென்ற காரணம் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவம் குறித்து மண்டைக்காடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்