ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக்கொலை

சமயபுரத்தில் ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ.வின் தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-10-29 19:27 GMT

சமயபுரத்தில் ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ.வின் தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆட்டோ டிரைவர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சின்னராசு (வயது 35). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். மண்ணச்சநல்லூர் காந்திநகரைச் சேர்ந்தவர் புல்லட் ராஜா என்கிற நளராஜா (41). இவர் கடந்த ஜனவரி மாதம் மண்ணச்சநல்லூர் காந்திநகரைச் சேர்ந்த லாரி உரிமையாளரான சதீஷ்குமார் (32) என்பவரை கொலை செய்த வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

கள்ளத்தொடர்பு

இந்த நிலையில் நளராஜா சிறையில் இருக்கும்போது, அவரது மனைவி கிருஷ்ணவேணிக்கும், சின்ன ராசுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் சிறையில் இருந்த புல்லட் ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இதனிடையே மனைவிக்கும், சின்னராசுக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பை அறிந்து இருவரையும் நளராஜா கண்டித்துள்ளார். ஆனாலும் இருவரும் கள்ளத்தொடர்பை தொடர்ந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் சின்னராசு நளராஜாவின் மனைவி கிருஷ்ணவேணியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். இதை அறிந்த நளராஜா அவர்களை பின்தொடர்ந்து சமயபுரம் சென்றார்.

குத்திக்கொலை

அப்போது மாரியம்மன் கோவில் முடி காணிக்கை மண்டபம் அருகே நின்று கிருஷ்ணவேணியுடன் சின்னராசு பேசிக்கொண்டிருந்தார். இதைகண்ட நளராஜா அவர்களை கண்டித்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நளராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சின்னராசுவின் முகம், கழுத்து, வயிறு, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த சின்னராசு துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து நளராஜா அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

முன்னாள் எம்.எல்.ஏ.வின் தம்பி

தொடர்ந்து சின்னராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நள ராஜாவை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சமயபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பி ஓடிய நளராஜா முன்னாள் எம்.எல்.ஏ.பரமேஸ்வரி முருகனின் தம்பி ஆவார்.

Tags:    

மேலும் செய்திகள்