போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

கும்பகோணத்தில் மகன் மீது பொய்வழக்கு போட்டுள்ளதாக கூறி போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-08 20:37 GMT

கும்பகோணம்:

கும்பகோணத்தில் மகன் மீது பொய்வழக்கு போட்டுள்ளதாக கூறி போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்டோ டிரைவர்

கும்பகோணம் செக்காகன்னி பகுதியை சேர்ந்தவர் ஜான்பென்னி (வயது 49). ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் பிரவின் குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து கடந்த மாதம் (ஆகஸ்டு) 11-ந் தேதி வெளியே வந்தார்.

அதன்பிறகு கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் செல்போன் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக போலீசார் பிரவின்குமார் மற்றும் ஹரி பாலாஜி, சூர்யா, அருண் மற்றும் ஆகாஷ் ஆகியோரை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர்.

போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிப்பு

இந்த நிலையில் தனது மகன் கைது செய்யப்பட்டதை அறிந்த ஜான்பென்னி கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த போலீசாரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதில் பிரவின்குமாருக்கு பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளதாகவும், அதனால் தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த ஜான்பென்னி தனது மகன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் தண்ணீர் மற்றும் அங்கிருந்த பாதுகாப்பு பொருட்களை வைத்து தீயை அணைத்தனர்.

தீவிர சிகிச்சை

இதில் உடல் முழுவதும் தீ பரவி படுகாயம் அடைந்த ஜான்பென்னியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் இளவரசி ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஜான்பென்னிடம் வாக்குமூலம் பெற்றார். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்