10 பெண்களிடம் சங்கிலி பறித்த ஆட்டோ டிரைவர் கைது

குமரி மாவட்டத்தில் 10 பெண்களிடம் சங்கிலி பறித்த ஆட்டோ டிரைவர் கைது 35 பவுன் நகைகள் மீட்பு

Update: 2023-01-03 19:41 GMT

அழகியபாண்டியபுரம்,

குமரி மாவட்டத்தில் 10 பெண்களிடம் சங்கிலி பறித்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் 35 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

பெண்களிடம் சங்கிலி பறிப்பு

குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி பகுதியில் பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன. இதுபற்றி பூதப்பாண்டி போலீசில் பெண்கள் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுபற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பவம் நடந்த இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவரும், அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் எண்ணையும் கண்டு பிடித்து கண்காணித்து வந்தனர்.

ஆட்டோ டிரைவர்

இந்தநிலையில் நாகர்கோவில் வடசேரி பஸ்நிலைய வாகனம் நிறுத்தும் பகுதியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் போல் ஒருவர் நடமாடுவதாக பூதப்பாண்டி போலீசாருக்கு நேற்று பகல் தகவல் வந்தது.

உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் ஜான் என்ற ஜான் பாண்டியன் (வயது 37) ஆட்டோ டிரைவர், நெல்லை மாவட்டம் நாங்குநேரி மருதங்குளம் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் என்றும், பூதப்பாண்டி பகுதியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

கைது

மேலும் ஜான் பாண்டியன் மோட்டார் சைக்கிளில் பூதப்பாண்டி பகுதியில் சுற்றி வந்து, வயதான பெண்கள் தனியாக இருப்பதை அறிந்து, அவர்களிடம் முகவரி கேட்பது போல் நடித்து தங்க சங்கிலியை பறித்து உள்ளார். பின்னர் அங்கிருந்து நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்துக்கு வந்து இரு சக்கர வாகன நிறுத்தத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, பஸ் ஏறி சென்னை சென்று விடுவார். அங்கு ஜான் பாண்டியன் அடையாறு பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார் என்ற தகவலும் வெளியானது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

35 பவுன் நகைகள் மீட்பு

அவர் கொடுத்த தகவலின் பேரில் 35 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இவை அனைத்தும் 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பூதப்பாண்டி பகுதியில் 10 பெண்களிடம் இருந்து பறிக்கப்பட்ட சங்கிலிகள் ஆகும். 

Tags:    

மேலும் செய்திகள்