மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி - குழந்தை உள்பட இருவர் படுகாயம்

திருத்தணியில் மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார். உடன் வந்த குழந்தை உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-05-04 09:38 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் கீழ் முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த பாபு மகன் தினேஷ் (வயது 25). இவர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று தனது சகோதரர் சதீஷின் குழந்தை பெலிப்ஸ் (வயது 2) என்பவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து குழந்தை பெலிப்ஸ் மற்றும் அண்ணி லாவண்யா (வயது 24) ஆகிய இருவரையும் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திருத்தணி ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

முருக்கம்பட்டு பெட்ரோல் பங்க் அருகே செல்லும்போது, சாலையின் எதிர்திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் தினேஷின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். மேலும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த லாவண்யா மற்றும் குழந்தை பெலிப்ஸ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தினேஷின் தந்தை பாபு திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் தினேஷ் மோட்டார் சைக்கிள் மீது மூன்று சக்கர ஆட்டோ ஒன்று மோதிய வேகத்தில் நிற்காமல் சென்றது தொிந்தது. இதனையடுத்து ஆட்டோ டிரைவர் சரவணனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்