காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுத்து பாலைவனம் ஆக்க முயற்சி
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுத்து பாலைவனம் ஆக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்று முத்தரசன் கூறினார்.
திருத்துறைப்பூண்டி:
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுத்து பாலைவனம் ஆக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்று முத்தரசன் கூறினார்.
பேட்டி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கைவிட வேண்டும்
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் மத்திய அரசு நிலக்கரி எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த நினைப்பது காவிரி டெல்டா பாசன மக்களை பழிவாங்கும் செயலாகும். இந்த திட்டத்தை செயல்படுத்தி டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
எனவே இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயலை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
இயற்கை அளித்த கொடை
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கிவரும் காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு முனைப்புடன் செயல்படுத்த முயற்சித்து வருகிறது. ஆசியாவிலேயே சிறந்த சமவெளி பகுதியாக இயற்கை அளித்த கொடை இந்த சமவெளி பகுதியாகும்.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் உணவு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் காவிரி பாசன மாவட்டங்களில் காலம், காலமாக தீவிர விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது. காவிரி பாசன மாவட்டங்களில் ஆளும் மத்திய அரசுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலை இருப்பதன் காரணமாக இப்பகுதி மக்களை திட்டமிட்டு பழிவாங்கும் எண்ணத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக கண்டிக்கிறது. எனவே இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ஏற்படும் முழு விளைவுகளுக்கும் மத்திய அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.