ஆட்டோவில் கடத்தி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி; டிரைவர் கைது

கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண்ணை ஆட்டோவில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2023-02-12 18:45 GMT

திண்டிவனம்

தொழிலாளி மனைவி

திண்டிவனம் அடுத்த கீழ்சிவிரி கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார், தொழிலாளி. இவரது மனைவி ராஷிகா(வயது 28). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்கிடையே தகராறு நடந்ததாக தெரிகிறது. இதில் கணவரிடம் கோபித்துக்கொண்ட ராஷிகா அவரது தாய் வீட்டுக்கு செல்வதற்காக இரவு 10 மணி அளவில் நல்லாளம் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

குறுக்கு வழியில் சென்ற ஆட்டோ

அப்போது திண்டிவனம் செல்வதற்காக அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோவில் அவர் ஏறினார். சிறிது தூரம் சென்றதும் திடீரென பெருமுக்கல் மலைப்பகுதிக்கு செல்லும் குறுக்கு வழியில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த ராஷிகா கூச்சல் எழுப்பினார். உடனே ஆட்டோ டிரைவர் சத்தம் போடாதே என கூறி அவரை மிரட்டினார். ஆனால் அவரோ தொடர்ந்து கூச்சல் எழுப்பிக்கொண்டே இருந்தார்.

கையில் கடித்தார்

இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் ராஷிகாவின் வாயை பொத்தி அவரை தாக்கி கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது ஆட்டோ டிரைவரின் பிடியில் இருந்து தப்பிக்க போராடிய ராஷிகா திடீரென டிரைவரின் கையில் கடித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி அருகில் இருந்த வீட்டில் தஞ்சம் அடைந்தார்.

உடனே கிராமமக்கள் ஆட்டோ டிரைவரை பிடிப்பதற்காக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் டிரைவர் ஆட்டோவுடன் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். பின்னர் அங்குள்ளவர்கள் ராஷிகாவை மீட்டு அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆட்டோ டிரைவர் கைது

இது குறித்து ராஷிகா கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில் ராஷிகாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் பெருமுக்கல் பகுதியை சேர்ந்த முருகன் மகன் சுகன்ராஜ்(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்