குடிபோதையில் மனைவியை அடித்துக்கொன்றுவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி
வெள்ளியணை அருகே குடிபோதையில் மனைவியை அடித்துக்கொன்றுவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி செய்த தொழிலாளிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடிபோதையில் தகராறு
கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள முஷ்டகிணத்துப்பட்டி தெற்கு காலனி கிழக்கூரை சேர்ந்தவர் ராஜூ (வயது 52) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சின்னப் பொண்ணு (50). இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் தினமும் ராஜூ குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சின்னப்பொண்ணுவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அடித்துக் கொலை
அதேபோல் கடந்த 18-ந்தேதி இரவும் ராஜூ குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி சின்னப்பொண்ணுவிடம் சண்டையிட்டு அவரை அடித்து துன்புறுத்தி ஊதாங்குழலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சின்னப்பொண்ணு மயக்கமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து பயந்துபோன ராஜூ வெஞ்சமாங்கூடலூர் பகுதியில் வசிக்கும் மகள் புஷ்பராணிக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து மகள் புஷ்பராணி உறவினர்களுடன் முஷ்டகிணத்துப்பட்டிக்கு வந்துள்ளார். அப்போது ராஜூ தனது வீட்டுக்குள் சென்று தாழிட்டுக் கொண்டார்.
தற்கொலை முயற்சி
இதனையடுத்து உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜூ சேலையில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அதைத்தொடர்ந்து அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்த சின்னப்பொண்ணுவின் உடலையும் ஒருவேளை உயிர் இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் உறவினர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது உறுதியானது. இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சத்யபிரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.